< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 July 2023 5:12 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயனற்ற இறைச்சி கூடம்

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் நவீன இறைச்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள இந்த இறைச்சி கூட கட்டிடம் பயன்பாடு இன்றி உள்ளதால், பெரம்பலூர் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளில் அறுக்கப்படும் பன்றி, ஆடு உள்ளிட்ட இறைச்சியின் கழிவுகளை திறந்த வெளியிலேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயன்பாடு இன்றி உள்ள நவீன இறைச்சி கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாணவ-மாணவிகள் அவதி

பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தின் வழியாக செல்லும் அரசு பஸ்கள் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வருவதினால், இப்பகுதியில் இருந்து வெளியூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் காலை நேரத்தில் உணவு அருந்த முடியாமல் அவசர அவசரமாக கிளம்பி பஸ் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குறித்த நேரத்திற்கு அரசு பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதர்மண்டிய பகுதி சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தின் பின்புறம் ஏராளமான செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதினால் இப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிழற்குடை அமைக்கப்படுமா?

பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஆசிரியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், வேப்பூர் மகளிர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் நின்று பஸ் ஏறி சென்று வருகின்றனர். மேலும் பயணிகள் நிழற்குடை இன்றி பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் கால்கடுக்க நின்று பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்