அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேவையற்ற வேகத்தடைகள்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்து சேர்வா மடம் சாலையில் தேவையில்லாத இடங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மாற்றப்படாத தெருவிளக்குகள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி பஸ் நிறுத்தம் முதல் அரசு மருத்துவமனை வரை சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் போதிய வெளிச்சம் இன்றி எரிவதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து போதிய வெளிச்சம் இன்றி எரியும் மின் விளக்குகளை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் தா.பழூர் சாலையில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று திசைகளான சிதம்பரம், திருச்சி, விருத்தாச்சலம் உள்ளிட்ட சாலைகளில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலைகளில் வரும் வாகனங்கள் அதிவேகமாக வரும்போது ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் விடுபட்டுள்ள மற்ற மூன்று சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
திறந்து கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால்கள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் ஆங்காங்கே கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் ஒரு சில இடங்களில் மூடப்படாமல் உள்ளதால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும் வாய்க்கால்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு சில இடங்களில் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.