கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் நெடுஞ்சாலைகளில் இருந்து கோம்புப்பாளையம் பகுதிக்கு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தார் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான தார்சாலையை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இளமாறன், வேலாயுதம்பாளையம்.
வாகன ஓட்டிகள் அவதி
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கந்தம்பாளையம் வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்போது உழவர் சந்தை அருகே தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் சாலையை விட சற்று உயரமாக கட்டப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
லலிதா, கந்தம்பாளையம்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையம் வழியாக மின் கம்பிகள் செல்கின்றன. தார் சாலை வழியாக செல்லும் இந்த மின் கம்பிகளால் கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராமசாமி, கட்டிப்பாளையம்.
திறக்கப்படாத சேவை மையம்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் நொய்யல் அருகே குறுக்கு சாலையில் உள்ள பங்களா நகரில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் திறப்பு விழாவும் நடைபெற்று விட்டது. ஆனால் சேவை மையத்தை திறந்து வைத்து சேவைகள் செய்யப்படவில்லை. இந்த சேவை மையம் அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகளுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த சேவை மையம் திறக்கப்படாததால் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜு, நொய்யல்.