அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம் விளாங்குடி விநாயகர் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், விளாங்குடி.
கடிக்க வரும் தெருநாய்கள்
அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், திருமானூர்.
மழைமானி மேல் படரும் செடி-கொடிகள்
அரியலூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பு மழைபெய்யும்போது அதன் அளவை குறிக்க மழைமானி அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முள்வேலி வைத்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால் மழை மானியை சுற்றிலும் புதர் மண்டி முட்கள் வளர்ந்துள்ளன. மழை மானியின் மேலேயே செடி, கொடிகள் படர்ந்து உள்ளதால் மழையின் அளவு துல்லியமாக பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த இடத்தினை சுத்தம் செய்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
மலைபோல் குவியும் குப்பைகள்
அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் தற்போது முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. முன்பு சமுதாய கூடம் இருந்த இடத்தில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக அங்கே கொட்டி வந்தனர். தற்போது சமுதாயக்கூடம் முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது. பஸ் நிலையத்தின் உள்ளே அம்மா உணவகம், ஆதரவற்றோர் இல்லம் மட்டும் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்திற்கு முன்பு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. ஆடி மாத காற்றில் இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.