கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும்
கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே கட்டிபாளையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் சுற்று பகுதிகளை சேர்ந்த 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. விளை நிலங்களை ஒட்டி இந்த பள்ளி கட்டிடம் இருப்பதால் பள்ளி கட்டிடத்திற்குள் விஷப்பூச்சிகள், பாம்புகள் அடிக்கடி வந்துவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பெற்றோர், கட்டிபாளையம்.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, நாவல்நகர் காலனியின் மெயின் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று பலமாக அடிக்கும்போது இங்கு கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து பல்வேறு இடங்களில் விழுகிறது. இதனால் இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சியளிக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சதீஷ், வேலாயுதாம்பாளையம்.
சாய்ந்து கிடக்கும் ஊர் பெயர் பலகை
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நங்கவரத்தில் இருந்து திருச்சி மாவட்டம் பெருகமணி செல்லும் வழியில் அனஞ்சனூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கான பெயர் பலகை நெடுஞ்சாலைத்துறை மூலம் வைக்கப்பட்டது. தற்போது இந்த ஊர் பெயர் பலகை சாய்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் செல்லும்போது ஊர் பெயர் தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், நங்கவரம்.
சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம்
கரூர் மாவட்டம் நடையனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே நொய்யல்-வேலாயுதம்பாளையம் தார் சாலையின் குறுக்கே பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தின் அருகே போதுமான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் நிலை தடுமாறி குழிக்குள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமான சூழ்நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் நெடுகிலும் பெரிய அளவிலான தடுப்புகள் அமைத்து வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரோஸ்மேரி, நடையனூர்.