< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 July 2023 11:45 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் இருந்து பெரம்பலூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் காலையில் பெரம்பலூரில் இருந்து ஆய்க்குடி வரை சென்று ஆய்க்குடி, எழுமூர், சித்தளி, பீல்வாடி, சிறுகுடல் வழியாக சுமார் 8.15 மணியளவில் செங்குணம் கிராமத்திற்கு வரும் அரசு நகர பஸ்சில் கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி மாணவர்களால் ஏறமுடியவில்லை. ஒரு சில நாட்களில் இந்த அரசு நகர பஸ் செங்குணம் கிராம பஸ் நிறுத்தத்தில் நிற்பதுகூட இல்லை. இதேபோல காலையில் பெரம்பலூரில் இருந்து எழுமூர் வரை சென்று எழுமூர், கீழப்புலியூர், சிறுகுடல் வழியாக காலை சுமார் 8.30 மணியளவில் செங்குணம் கிராமம் வரும் அரசு பஸ்சில் செங்குணம் சமுதாய கூடம் பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சில் ஏறுவதில் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதற்கு அடுத்த பஸ் நிறுத்தமான செங்குணம் கனரா வங்கி பஸ் நிறுத்தத்தில் மாணவர்களால் பஸ்சின் உள்ளே ஏறவே முடியவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குமார் அய்யாவு, செங்குணம்.

குடிநீர் தட்டுப்பாடு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு போதுமான குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், விஜயகோபாலபுரம்.

புதர்மண்டிய மைதானம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் ஏற்பட அதை வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மோசிகீரன், பெரம்பலூர்.

நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் ஊராட்சி, ஆலத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்ததையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இப்பகுதியில் மீண்டும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலத்தூர்.

மேலும் செய்திகள்