விழுப்புரம்
விழுப்புரம் அருகேஇந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய தீமிதி திருவிழாஏராளமானோர் பங்கேற்பு
|விழுப்புரம் அருகே மசூதியில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தீமிதி திருவிழா
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மசூதியில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எப்படி விரதமிருந்து கோவிலுக்கு செல்கிறார்களோ அதுபோல் இந்த விழாவில் பங்கேற்ற இந்துக்களும், முஸ்லிம்களும் 10 நாட்கள் விரதமிருந்து தீமிதிப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இரவு 11.30 மணியளவில் மசூதியின் உள்ளே முஸ்லிம்களும், அய்யப்ப பக்தர்களும் மாலை அணிந்தபடி வெற்றிலை, பாக்கு, ஊதுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர்.
தீக்குண்டத்தில் இறங்கினர்
பின்னர் இரவு 11.45 மணியளவில் முஸ்லிம்கள் மேளதாளம் முழங்க அருகில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு சென்று புனித நீராடிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மசூதி முன்பு இருந்த தீக்குண்டத்தில் நள்ளிரவு 12.15 மணியளவில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் இறங்கினார்.
அப்போது அவருக்கு வலதுபுறம் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரும் அவருடன் தீக்குண்டத்தில் இறங்கினார்கள். இவர்களை தொடர்ந்து இரு மதத்தினரும் சாதி, மதம் பார்க்காமல் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
ஏராளமானோர் பங்கேற்பு
விழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இந்துக்கள், முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.