திருச்சி
செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
|செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
தொட்டியம்:
தொட்டியம் வட்டம் முள்ளிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட திருஈங்கோய்மலை மேலத்தெருவில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா மற்றும் தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சொரிதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர் திருவீதிவுலா 2 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடம், தீர்த்த குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.