கரூர்
தவுட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
|தவுட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிடா வெட்டு நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
வடிசோறு நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் மகா மாரியம்மன், பகவதி அம்மன், கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, அன்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
24-ந் தேதி முதல் தினமும் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வந்தார். 30-ந் தேதி இரவு மகா மாரியம்மனுக்கு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் இரவு 7 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலா வந்தார்.
தீமிதி திருவிழா
நேற்றுமுன்தினம் மதியம் மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மன் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் தயாராக இருந்த குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதேபோல் பெண் பக்தர்கள் தீவாரி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
கிடா வெட்டுதல்
நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதி பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜையும் செய்தனர். இரவு வாண வேடிக்கை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியும், பகல் 11 மணியளவில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.