< Back
மாநில செய்திகள்
இடிந்து விழும் நிலையில் இருக்கும் நூலகம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

இடிந்து விழும் நிலையில் இருக்கும் நூலகம்

தினத்தந்தி
|
12 Dec 2022 12:15 AM IST

விழுப்புரம் அருகே இடிந்து விழும் நிலையில் இருக்கும் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு நாட்டின் கல்வியறிவை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு அதை பரவலாக்குவதும் அவசியமானது. அப்படிப்பட்ட கல்வியறிவை பரவலாக்க பள்ளிக்கூடங்களோடு பொது நூலகங்களும் அவசியமானவை. இதை உணர்ந்த அரசு, மாணவச் செல்வங்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் கல்வியறிவை மேம்படுத்தவும், போட்டித்தேர்வுகளை எழுதுபவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் விதமாகவும் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை சார்பில் மாவட்ட தலைநகரில் இருந்து கிராமப்புறங்கள் வரை நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நூலகங்கள் பலவற்றுக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்திலும், சில நூலகங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறபோதிலும் அந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து எந்தநேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்திலும் இயங்கி வருகிறது.

சேதமடைந்த நூலகம்

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நூலகங்களில் சில நூலக கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக விழுப்புரம் அருகே வளவனூர் சத்திரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள கிளை நூலகம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த நூலக கட்டிடம் கடந்த 1995-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இங்கு நூலக அலுவலர்கள் 2 பேர் பணியாற்றி வருகின்றனர். நூற்றுக்கணக்கான வாசகர்கள் உள்ளனர்.

இந்நூலகத்தில் வரலாறு, இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வரலாறு, வாழ்க்கையில் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு கட்டுரை, ஆன்மீகம், சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் உள்ளன. இந்த நூலக கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது பராமரிப்பு பணி செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதன் விளைவு தற்போது நூலக கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. கட்டிட சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இந்நூலகத்திற்கு வரும் வாசகர்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்துசெல்கின்றனர்.

புதிய கட்டிடம் கட்டப்படுமா?

மேலும் மழைக்காலங்களில், நூலக கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஒழுகுவதால் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. எனவே இந்த நூலக கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்