புதுக்கோட்டை
சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடம்... அச்சத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள்
|சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கின்றனர்.
கீரமங்கலம்:
சிதிலமடைந்த கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிக்கொல்லையில் கடந்த 1978-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளி ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூரையுடன் கூடிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் வகுப்பறை கட்டிடம் சிதிலமடைந்து வருவதால் அச்சமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை அந்த பள்ளியில் சேர்க்காமல் வெவ்வேறு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது 16 மாணவ, மாணவிகள் மட்டுமே அந்த பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களும் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலை உள்ளது. மேலும் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார்.
மாணவர்களின் எண்ணிக்கை...
இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் சார்பில் பள்ளியில் கழிவறைகளை அமைத்து கொடுத்துள்ளனர். இருப்பினும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தமளிப்பதாக கூறும் பொதுமக்கள், அந்த பள்ளிக்கு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அப்பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.
புதிய கட்டிடம்
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது:- இப்பள்ளியில் நாங்கள் படிக்கும்போது 2 ஆசிரியர்களுடன் சுமார் 65, 70 மாணவ, மாணவிகள் படித்தார்கள். பிறகு கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டதால் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அச்சப்பட்டதால், படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. திருவரங்குளம் ஒன்றியத்திலேயே ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரையுடன் உள்ள ஒரே பள்ளி இதுதான். எனவே இந்த பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வகுப்பறைகளுக்குள் மழைநீர்
அப்பள்ளியில் படிக்கும் மாணவரின் தந்தையான அன்புராஜ்:- இப்பள்ளி தொடங்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்துவிட்டபோது, பழைய நிலையில் ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் கூடிய கட்டிடத்தில்தான் இயங்குகிறது. ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் உடைந்துள்ள நிலையில் மழை நேரத்தில் வகுப்பறைகளுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனாலேயே பெற்றோர்கள் அச்சத்தில், மாணவர்களை இப்பள்ளியில் சேர்க்கவில்லை.
மாணவ-மாணவிகள் சிரமம்
விவசாயி பவுன்ராஜ்:- இந்த பள்ளிக்கு கான்கிரீட் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியபோது, புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. மழைக்காலத்தில் தண்ணீர் வடிந்து சுவர்களில் மின்சாரம் பாயுமோ என்ற அச்சமும் உள்ளது. வெயில் நேரத்தில் வகுப்பறைகளில் அனல் காற்று வீசுகிறது. இதனால் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். எனவே உடனடியாக இப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.