சென்னை விமான நிலையம்; பயணிகள் வசதிக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது
|சென்னை விமான நிலையத்தில் தினமும் 400 விமான சேவைகள் இயக்கப்படுகிறது. புதிய பன்னாட்டு முனையம் திறக்கப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை விமான நிலைய ஆணையக இயக்குனர் தீபக் ஏற்றி வைத்தார். இதில் சி.ஐ.எஸ்.எப். போலீஸ் டி.ஐ.ஜி, மற்றும் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
அப்போது விமான நிலைய இயக்குனர் தீபக் பேசியதாவது:-
சென்னை விமான நிலையத்தில் தினமும் 400 விமான சேவைகள் இயக்கப்படுகிறது. புதிய பன்னாட்டு முனையம் திறக்கப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பழைய பன்னாட்டு முனையம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் விரைவில் கட்டுமான பணி தொடங்கும்.சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக உள்நாட்டு முனையங்கள் 2 ஆக செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு பயணிகள் தடையில்லாமல் செல்ல வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. முனையங்களில் நவீன வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குடியரசு தின விழா முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சாகச அணிவகுப்பு நடந்தது. முதல் முறையாக பெண் போலீசாரும் விமான நிலையத்தின் முதல் தளத்தில் இருந்து கயிறு மூலம் இறங்குதல், பல வியூகங்களில் எதிரிகளை தாக்குவது, முக்கிய பிரமுகர்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பது, குழுவாக சேர்ந்து தனித்தனியாக தாக்குதல் நடத்துவது, 30 அடி உயரத்தில் இருந்து தேசிய கொடியை பிடித்தபடி கயிற்றில் இறங்குதல் போன்ற வீர சாகச செயல்களை செய்து காட்டினர். பின்னர் மனித கோபுரம் அமைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் கூறும்போது, "விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாருக்கு தமிழ் மொழியை கற்று கொடுத்து வருகிறோம். இதன் மூலம் பயணிகளிடம் அணுகுவது எளிதாக இருக்கும்" என்றார்.