சென்னை
டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள்: மதுரை செல்ல வந்த பயணியை திருப்பி அனுப்பிய விமான நிறுவன அதிகாரிகள்
|டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள் இருந்ததால் மதுரை செல்ல வந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து விமான நிறுவன அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்காக மதுரையை சேர்ந்த சர்மேஷ் கான் என்பவர் வந்தார். மாலை 4.55 மணிக்கு செல்லக்கூடிய விமானத்தில் டிக்கெட் ஆன்லைன் மூலமாக எடுத்திருந்தார்.
சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான டிக்கெட்டை பரிசோதித்து விட்டு சர்மேஷ்கானை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற சர்மேஸ்கான், டிக்கெட் புக்கிங் அலுவலகத்துக்கு சென்று ஆன்லைன் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து இருந்தார்.
அவர் விமானத்தில் ஏறுவதற்கு புறப்பட்டபோது விமான நிறுவன அதிகாரிகள் அவரது விமான டிக்கெட்டை பரிசோதனை செய்தனர். அப்போது டிக்கெட்டில் பாவா மெய்தீன் கான் என்றும், ஆதார் அட்டையில் சர்மேஷ் கான் எனவும் வெவ்வேறு பெயர்கள் இருந்ததால் அவரை பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இதனால் விமான நிலையத்தில் 4 மணி நேரம் காத்திருந்த அவர் பின்னர் வெளியே வந்தார். இதுபற்றி சர்மேஷ் கான், சமூக வலைதள பக்கத்தில், "இவ்வளவு பெரிய பாதுகாப்புடைய சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட்டிலும், ஆதார் அட்டையிலும் பெயர் வேறு வேறு இருந்தபோதிலும் பாதுகாப்பு அதிகாரிகள் அதை சரியாக பார்க்காமல் தன்னை எப்படி உள்ளே அனுமதித்தார்கள்?"என வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "பயண சீட்டு பதிவு செய்யும்போது பயணிக்கும் பயணியின் பெயரை முதல் பெயராகவும், அவரின் தந்தையின் பெயரை 2-வது பெயராகவும் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தந்தையின் பெயரை முதல் பெயராக பதிவு செய்து விட்டதால் பயணியின் பெயர் என அவர் தந்தையின் பெயர் வந்துவிட்டது. இதனால் தந்தை தான் பயணிக்க முடியுமே தவிர அவர் பயணிக்க முடியாது. எனவே அவரின் டிக்கெட்டில் இருக்கும் பெயரும் அடையாள அட்டையான ஆதார் கார்டில் இருக்கும் பெயரும் வேறுபட்டு இருந்ததால் அவருடைய பயணத்தை ரத்து செய்து வெளியே அனுப்பியதாக" தெரிவித்தனர்.