< Back
மாநில செய்திகள்
திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகள்:வியாபாரி உள்பட 2 பேர் பலி
மதுரை
மாநில செய்திகள்

திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகள்:வியாபாரி உள்பட 2 பேர் பலி

தினத்தந்தி
|
4 Oct 2023 3:42 AM IST

திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 பேர் இறந்தனர்.

திருமங்கலம்,

வாகனம் மோதியது

திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் ராமசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 23). இவர் மேலக்கோட்டை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வந்தார். அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய வேலைக்காக இருசக்கர வாகனத்தில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் சென்றார். செங்கப்படை விலக்கு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி காவிரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வியாபாரி பலி

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூடலிங்கம். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையின் எதிரே உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். பின்னர் கடைக்கு வருவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அப்பகுதியில் மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கூடலிங்கத்தின் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் இவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மதுரையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் கூடலிங்கத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்