கடலூர் துறைமுகம் அருகே விதிகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து
|கடலூர் துறைமுகம் அருகே விதிகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளுக்கு டீசல் மானியத்தை மீன்வளத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
கடலூர்:
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்திற்கு புறம்பாக, தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தும் படகுகள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபடும், இழுவலை பயன்படுத்தும் விசைப்படகுகளை கண்காணிக்கும் பொருட்டு, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையில் கடலூர் துறைமுகம் மற்றும் அருகே உள்ள கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராசாபேட்டை கடல் பகுதியில், விதிமுறைகளை மிறி 5 நாட்டிக்கல் மைல்களுக்குள்ளாக, இழுவலை பயன்படுத்தி மீன்பிடித்த, 2 பதிவு பெற்ற விசைப்படகுகள் கண்டறியப்பட்டு, அப்படகுகளின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டீசல் மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த குற்றப்பத்திரிக்கையின் மீது, உரிய விசாரணை மேற்கொண்டு, மண்டல துணை இயக்குநர் மூலம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எஸ்.டி.பி., ஐ.பி. போன்ற விசைப்படகுகள், துறைமுகத்திலிருந்து 5 நாட்டிகள் மையில்களுக்குள் இழவலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என்ற சட்டம் அமுலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.