தர்மபுரி
பென்னாகரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 1-ம் வகுப்பு மாணவன் பலி
|பென்னாகரம்:
பென்னாகரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 1-ம் வகுப்பு மாணவன் பலியானான்.
1-ம் வகுப்பு மாணவன்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எரங்காடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி மணி. இவர்களுக்கு கார்க்கி (வயது 7) என்ற மகன் இருந்தான். எட்டிக்குட்டையில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தான். இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே மேடான பகுதியில் நிறுத்தியிருந்த டிராக்டரில் ஏறி சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென டிராக்டர் பள்ளத்தை நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்க்கி டிராக்டரில் இருந்து குதித்தான். அப்போது டிராக்டரின் பின் சக்கரம் சிறுவனின் மீது ஏறிஇறங்கியது.
சோகம்
இதில் படுகாயம் அடைந்த கார்க்கியின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து பார்த்தபோது அவன் ரத்த வெள்ளத்தில் துடித்தான். இதையடுத்து உறவினர்கள் கார்க்கியை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட உறவினர்கள் கதறி அழுதனர். இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.