< Back
மாநில செய்திகள்
பர்கூர் அருகே வெவ்வேறு விபத்துகளில்  தனியார் நிறுவன பெண் ஊழியர் உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பர்கூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன பெண் ஊழியர் உள்பட 2 பேர் பலி

தினத்தந்தி
|
14 Sept 2022 10:25 PM IST

பர்கூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன பெண் ஊழியர் உள்பட 2 பேர் பலியாகினர்.

பர்கூர்:

பர்கூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன பெண் ஊழியர் உள்பட 2 பேர் பலியாகினர்.

தனியார் நிறுவன ஊழியர்கள்

பெங்களூரு ஏ.ஈ.டி. சிக்னல் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பெண் உள்பட 6 பேர் காரில் சென்னை சென்றனர். இந்த காரை பெங்களூருவை சேர்ந்த ஹர்ஷித் (வயது 21) என்பவர் ஓட்டி சென்றார். இவர்கள் சென்ற கார் பர்கூர் அருகே அங்கிநாயக்கனப்பள்ளி பகுதியில் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் பயணம் செய்த கவிதா (36) என்பவர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார்.

விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பர்கூர் போலீசார் இறந்த கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கட்டிட மேஸ்திரி

பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சி நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (42). கட்டிட மேஸ்திரி. இவர் மொபட்டில் பர்கூர் சென்று விட்டு நாடார் கொட்டாய்க்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் மீது மொபட் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கர் மீது பின்னால் வந்த சரக்கு வேன் ஏறி இறங்கியது.

இதில் சங்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து சென்ற பர்கூர் போலீசார் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்