< Back
மாநில செய்திகள்
தளி அருகேயானை தாக்கி தோட்ட காவலாளி பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தளி அருகேயானை தாக்கி தோட்ட காவலாளி பலி

தினத்தந்தி
|
25 Aug 2023 7:15 PM GMT

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே காட்டு யானை தாக்கி தோட்ட காவலாளி பலியானார்.

காவலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே பேலாளம் அன்லேமரத்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 53). இவருக்கு ஈரம்மா என்ற மனைவியும், பசவராஜ் என்ற மகனும், சிவம்மா என்ற மகளும் உள்ளனர். ராஜப்பா அகலக்கோட்டை அருகே கும்ளத்தூரில் உள்ள நர்சரி பண்ணையில் தங்கி காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நர்சரி பண்ணையில் வேலைக்கு சென்ற ராஜப்பா நேற்று காலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அங்கு நர்சரி பண்ணையில் இருந்து சிறிது தொலைவில் காட்டு யானை தாக்கியதில் இடது கை மணிக்கட்டு துண்டாகி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

வாக்குவாதம்

இதுபற்றி அறிந்ததும் ஜவளகிரி வனத்துறையினர் மற்றும் தளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதேபோல அன்லேமரத்தொட்டி பகுதி மக்களும் நர்சரி தோட்டத்தில் திரண்டனர்.

இதையடுத்து போலீசார் ராஜப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். அப்போது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரை தடுத்தனர்.

வனத்துறையினர் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க சோலார் வேலி அமைக்கக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சோகம்

இதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி காவலாளி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்