நாமக்கல்
பரமத்திவேலூரில்சுத்தியலால் அடித்ததில் சிகிச்சை பலனின்றி டீக்கடை தொழிலாளி சாவுகொலை வழக்காக மாற்றி மனைவியிடம் விசாரணை
|பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் சுத்தியலால் அடித்ததில் பலத்த காயம் அடைந்த டீக்கடை தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை வழக்காக மாற்றி கைதான மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுத்தியலால் அடித்தார்
பரமத்திவேலூர் கந்தநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர் வேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டீக்கடையில் பஜ்ஜி, வடை, போண்டா போடும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கலா (36). இந்த நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கலா கணவர் என்றும் பாராமல் விஜயகுமாரை சுத்தியலை கொண்டு தலையில் ஓங்கி அடித்தார்.
கொலை
இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து போலீசார் கலாவை கைது செய்தனர். மேலும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.