கிருஷ்ணகிரி
அஞ்செட்டி அருகே பதற்றம்:வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றவர் திடீர் சாவுசாலை மறியல்-சோதனை சாவடி தீ வைத்து எரிப்பு
|தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட சென்றவர் திடீரென்று இறந்தார். இதனால் உறவினர்கள் வனத்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
வனத்துறையினர் சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத்துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.
ஒருவர் பிடிபட்டார்
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றார்கள். இந்த நிலையில் வேகமாக சென்ற அவர்கள் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர். உடனே வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்கள் கையில் வைத்திருந்த நெற்றியில் பொருத்தப்படும் பேட்டரி லைட், கை டார்ச், முயலை பிடிக்க கூடிய கருவி ஆகியவை இருந்தன.
இந்த நிலையில் தவறி விழுந்தவர்களில் 2 பேர் தப்பி ஓட ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார். வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
பரிதாப சாவு
இதையடுத்து வனத்துறையினர் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் நாட்ராம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர். அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.
உறவினர்கள் கதறல்
இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் வெங்கடேஷ் முயல் வேட்டைக்கு செல்லவில்லை என்றும், தொலைந்த மாட்டை தேடி சென்றதாகவும், வனத்துறையினர் தாக்கியதில் இறந்து விட்டதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
சோதனை சாவடிக்கு தீ வைப்பு
இந்த நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர். அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
மேலும் அட்டப்பள்ளம் கிராமம் அருகே அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.