< Back
மாநில செய்திகள்
கடல் சீற்றம் எதிரொலி    பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
கடலூர்
மாநில செய்திகள்

கடல் சீற்றம் எதிரொலி பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

தினத்தந்தி
|
10 Oct 2022 12:15 AM IST

கடல் சீற்றம் காரணமாக பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

பரங்கிப்பேட்டை,

மீனவ கிராமங்கள்

பரங்கிப்பேட்டை பகுதிக்குட்பட்ட முடசல்ஓடை, அன்னங்கோவில், சாமியார்பேட்டை, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, குமாரப்பேட்டை, பேட்டோடை, பெரியகுப்பம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, முழுக்குதுறை, எம்.ஜி.ஆர்.திட்டு, சூர்யாநகர், பில்லுமேடு, கண்ணகிநகர், பட்ரையடி, சின்னவாய்க்கால் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பைபர் படகுகள், விசை படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

கடல் சீற்றம்

இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்து தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், கடல் சீற்றத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நேற்றும் கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக இருந்ததால் பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்களின் படகுகள் அந்தந்த கிராமங்களில் உள்ள கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. மீனவர்கள் 3 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாததால் அன்னங்கோவில். எம்.ஜி.ஆர். திட்டு, முடசல்ஓடை ஆகிய மீன் ஏலம் விடும் தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி போன்ற பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை மிகவும் குறைந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்