< Back
மாநில செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சாதித்ததா? சறுக்கியதா?
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகர் மாவட்டம் சாதித்ததா? சறுக்கியதா?

தினத்தந்தி
|
11 Oct 2022 7:04 PM GMT

ஜல் ஜீவன் திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் சாதித்ததா? சறுக்கியதா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய் மூலம் வழங்குவதற்காக, பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி ஜல்ஜீவன் மிஷன் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

குடிநீர் வழங்க இலக்கு

அந்த சமயத்தில் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் மொத்தம் 19 கோடியே 14 லட்சத்து 66 ஆயிரத்து 849 வீடுகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு இருந்தது. அதில் 16 சதவீதமான 3 கோடியே 23 லட்சத்து 62 ஆயிரத்து 838 வீடுகளில் மட்டும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

எனவே மீதமுள்ள 15 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 11 வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் மட்டும் 7 கோடியே 9 லட்சத்து 46 ஆயிரத்து 15 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளன.

100 சதவீதம் இணைப்பு

இந்த திட்டத்தின் முதல்படியாக கிராமங்களில் உள்ள வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்கு தேவையான குடிநீர் ஆதாரங்கள் முதலில் உருவாக்கப்படுகின்றன. பின்னர் குழாய்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் தெலுங்கானா மற்றும் அரியானா மாநிலங்களும், கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, டாமன் அண்ட் டையூ, டாதரா அண்ட் நாகர் ஹாவலி ஆகிய யூனியன் பிரதேசங்களும் 100 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை வழங்கி உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நிலவரப்படி கிராமப்புறங்களில் 1 கோடியே 24 லட்சத்து 93 ஆயிரத்து 892 வீடுகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு இருந்தன. அதில் அப்போது 17.42 சதவீதமான 21 லட்சத்து 76 ஆயிரத்து 71 வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புக்கள் இருந்தன. எனவே மீதமுள்ள 1 கோடியே 3 லட்சத்து 17 ஆயிரத்து 821 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இந்த திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டன. அதில் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் 47 லட்சத்து 81 ஆயிரத்து 283 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2020-2021-ம் நிதி ஆண்டில் 11 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களுக்கு ரூ. 50 கோடியே 79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஜல்ஜீவன் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் 50,823 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு தனி நபருக்கு 55 லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

15-வது நிதிக்குழு நிதி ஒதுக்கீட்டில் 11 யூனியன்களிலும் 20,172 வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2021-2022-ம் நிதியாண்டிற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. ஆனால் 15வது நிதி குழு நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ள நிலையில் அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வரவேற்கிறோம்

இந்த திட்டத்தின் நிறை, குறைகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வத்திராயிருப்பை சேர்ந்த தனுஷ்கோடி:- ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் வரவேற்க கூடிய ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

ஆனால் அவ்வாறு வழங்கும் குடிநீர் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. தாமிரபரணி கூட்டுகுடிநீர் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கும் தண்ணீரை இப்பகுதியில் உள்ள போர்வெல் தண்ணீருடன் கலந்து வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை என்பது தொடர்கதையாக உள்ளது. தாமிரபரணி தண்ணீரை மட்டும் கலப்படம் இன்றி வழங்கினால் நன்றாக இருக்கும்.

25 குடம் தண்ணீர்

ஆனையூரை அடுத்த இந்திராகாந்தி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகேஸ்வரி:- சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட வாடியூர், நடுவப்பட்டி, மங்கலம், செங்கமலப்பட்டி, பூலாவூரணி, நாரணாபுரம், மாரனேரி, சித்துராஜபுரம், வேண்டுராயபுரம், தச்சக்குடி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், ஆனையூர், விஸ்வநத்தம், அனுப்பன்குளம் என 15 பஞ்சாயத்துக்களில் ஒரு சில குறிப்பிட்ட பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 25 குடம் தண்ணீர் கிடைக்கிறது. இது எங்கள் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கிறது. இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னர் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த அடிபம்பு மூலம் தண்ணீர் பெற்று வந்தோம். ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் குடிநீர் உரிய தரத்துடன் உள்ளது. இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வேலைப்பளு குறைந்தது

மல்லி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,

ஸ்ரீவில்லிபுத்தூர்ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மல்லி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 100 சதவீத குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மல்லி ஊராட்சியில் உள்ள மொத்தம் 1,310 வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 1,310 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

சேதுராஜபுரத்தை சேர்ந்த ராஜலட்சுமி:- அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சேதுராஜபுரம், செட்டிபட்டி, கோபாலபுரம், பெரியநாயகபுரம், சுக்கிலநத்தம், டி.மீனாட்சிபுரம் ஆகிய ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அனைவரின் வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஒவ்வொரு பகுதியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. முன்பு குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. தற்போது அந்த குறை நீங்கி உள்ளது. இதனால் வேலைப்பழு குறைந்துள்ளது.


மேலும் செய்திகள்