சேலம்
மது அருந்திவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தாரா?
|மது அருந்திவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தாரா?
சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி மலைமாரியம்மன் கோவில் காலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று முன்தினம் ஆசிரியர் அறிவழகன் மது அருந்திவிட்டு வந்ததாக கூறி பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) விஸ்வநாதன் நேற்று அரசிராமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் அறிவழகனிடமும் விசாரணை நடத்தி விளக்கம் கேட்கப்பட்டது. இதனிடையே புகாரில் சிக்கிய ஆசிரியர் அறிவழகன் அங்கிருந்து சங்ககிரி சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) விஸ்வநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கு ஆசிரியர் அறிவழகன் மது அருந்திவிட்டு வந்தது உண்மையா? என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கூறியதால் அவரை சங்ககிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது விளக்கம் தொடக்க பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.