< Back
மாநில செய்திகள்
வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு இருவார விழிப்புணர்வு முகாம்கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் 
கடலூர்
மாநில செய்திகள்

வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு இருவார விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
10 Jun 2023 6:45 PM GMT

கடலூர் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு இருவார விழிப்புணர்வு முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

கடலூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு இருவார விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. அதாவது நாட்டில் 5 வயதிற்குட்ட குழந்தைகளின் இறப்புக்களில் 10 சதவீதம் பேர் வயிற்றுப்போக்கினால் இறக்கின்றனர். அதனால் இம்முகாமின் முக்கிய நோக்கம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப்போக்கினால் இறப்பு இல்லை என்ற நிலையை கொண்டு வருவதே ஆகும்.

இந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்து 668 குழந்தைகள் பயனடைய உள்ளனர். அதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். சின்ஸ் மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. இத்திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஓ.ஆர்.எஸ். பாக்கெட் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு சேர்த்து வழங்குவார்கள்.

செய்முறை விளக்கம்

மேலும் தாய்ப்பால் கொடுத்தல், இணை உணவு வழங்குதல், கை கழுவுதலின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறுவார்கள். ஓ.ஆர்.எஸ். திரவக் கரைசல் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் செய்முறை விளக்கம் அளிப்பார்கள். இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எடை எடுக்கப்பட்டு, அதில் சத்து குறைவான குழந்தைகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்வார்கள்.

வயிற்றுப்போக்கு பாதிப்பு இருந்தால் உடன் சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார்கள். பிறந்த குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் 6 மாத காலம் வரை தாய்ப்பால் ஊட்டுதலைப் பற்றியும், 6 மாதத்திற்கு பிறகு இணை உணவு வழங்குதல் பற்றியும் விழிப்புணர்வு அளிக்கப்படும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து, தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதலின் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இருவார வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓ.ஆர்.எஸ். சின்ஸ் கார்னர் ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். கூடுதலாக திரவ ஆகாரங்கள் மற்றும் உணவு கொடுக்க வேண்டும். துத்தநாக மாத்திரைகளை 14 நாட்களுக்கு (வயிற்றுப்போக்கு நின்றுவிட்டாலும்) தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

உடல்நிலை மோசம்

இதுதவிர குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்தாலோ, குழந்தைகள் தாய்ப்பாலோ, திரவமோ குடிக்க முடியாத நிலை ஏற்படுதல், குழந்தைகளின் மலத்தில் ரத்தம் காணப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்