திருவண்ணாமலை
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
|திருவத்திபுரம் நகராட்சியில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு
திருவத்திபுரம் நகராட்சியில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரமன்ற கூட்டம்
செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பேபி ராணி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) குமரன், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 27 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளை ஒன்றன்பின் ஒன்றாக பேசினர்.
தர்ணா போராட்டம்
அப்போது 12-வது வார்டை சேர்ந்த பா.ம.க. கவுன்சிலர் சீனிவாசன் கடந்த 1½ ஆண்டுகளாக தாங்கள் தெரிவித்த எந்தவிதமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் எனது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி கருப்பு துணியால் கண்ணை கட்டி கொண்டு நகரமன்ற கூட்டத்தின் நடுவில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் 20-வது வார்டை சேர்ந்த பா.ம.க. கவுன்சிலர் பத்மபிரியாவும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மண்டியிட்டு நகர்ந்தவாரே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என கூறிக் கொண்டு வெளியேறினார்.
அதேபோல 14-வது வார்டு கவுன்சிலர் அகமத் எனது பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். அவ்வாறு பணிகளை முடிக்கும் வரை மன்ற கூடத்தை விட்டு வெளியேற மாட்டேன் என தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தற்கொலை செய்து கொள்வேன்
அதற்கு நகரமன்ற தலைவர் மோகனவேல், ஒரு வாரத்தில் பணிகள் முடிக்கப்படும் என்றார்.
ஆனால் பணிகள் முடித்தால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிடுவேன் என அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மற்ற கவுன்சிலர்கள் அகமத்தை சமாதானம் செய்ய முயன்றனர்.
அதனை ஏற்க மறுத்த அவர், என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தண்ணீர் டேங்க் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக கூறிக்கொண்டு, நகரமன்ற கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
அப்போது கையில் இருந்த நகரமன்ற அஜெண்டாவை தூக்கி வீசிவிட்டு சென்றார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.