< Back
மாநில செய்திகள்
காதலியின் கருவை கலைத்துவிட்டு வேறொரு பெண்ணை 2-வது திருமணம் மணக்கோலத்தில் கைதான மாப்பிள்ளை..!
கடலூர்
மாநில செய்திகள்

காதலியின் கருவை கலைத்துவிட்டு வேறொரு பெண்ணை 2-வது திருமணம் மணக்கோலத்தில் கைதான மாப்பிள்ளை..!

தினத்தந்தி
|
26 May 2023 12:15 AM IST

பண்ருட்டியில் காதலியின் கருவை கலைத்துவிட்டு வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்த மெக்கானிக் மணக்கோலத்தில் கைது செய்யப்பட்டார்.

பண்ருட்டி,

திருமணம் செய்து கொள்வதாக

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் ரவி. இவர் சென்னை சாலையில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய கடையில் ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன்(வயது 31) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ரவியின் மகள் ரம்யாவிற்கும்(29), சுப்பிரமணியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

அப்போது சுப்பிரமணியன் ரம்யாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இதில் ரம்யா கர்ப்பமானார். இதுபற்றி அறிந்த சுப்பிரமணியன் கருவை கலைக்குமாறு கூறியுள்ளார். தொடா்ந்து ரம்யாவும் கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.

வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி சுப்பிரமணியனுக்கும், கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதுபற்றி அறிந்த ரம்யா, தன்னை ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டால், திருமணம் செய்து கொள்வதாக ரம்யாவிடம் சுப்பிரமணியன் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய ரம்யா, அந்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

நள்ளிரவில் தர்ணா

மேலும் இருவரும், கடந்த 22-ந்தேதி விழுப்புரத்தில் உள்ள ரம்யாவின் குலதெய்வ கோவிலான முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சுப்பிரமணியனுக்கும், ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணுக்கும் 25-ந்தேதி(அதாவது நேற்று) திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரம்யாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சுப்பிரமணியன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இந்த போராட்டம் நள்ளிரவை கடந்தும் நடந்தது.

இதுபற்றி அறிந்த பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ரம்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கணவரோடு சேர்த்து வைக்க வேண்டும்

அப்போது சுப்பிரமணியன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து விட்டார். தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகிறார். எனவே அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, தனது கணவரோடு தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியனை தேடி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அங்கு இருந்த திருமண மண்டபங்கள் மற்றும் கோவில் மண்டபத்தில் சுப்பிரமணியனுக்கு திருமணம் நடைபெறுகிறதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மணக்கோலத்தில் கைது

இந்த நிலையில் நேற்று காலையில் சுப்பிரமணியனுக்கும், பாதிரிக்குப்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று, மணக்கோலத்தில் இருந்த சுப்பிரமணியனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

காதலியின் கருவை கலைத்து ஏமாற்றிவிட்டு 2-வது திருமணம் செய்தவரை மணக்கோலத்தில் போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்