கிருஷ்ணகிரி
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
|கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் தேவி, மாவட்ட பொருளாளர் சுஜாதா, மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பார்வதி, கவிதா, ராணி, பழனியம்மாள், மஞ்சுளா, மஞ்சு, பச்சியம்மா, முனியம்மா, ஜெகதா, மாலா, அனிதா, சித்ரா மற்றும் ரோகிணி ஆகியோர் கோரிக்கை குறித்துபேசினார்கள்.
கோஷங்கள்
தர்ணா போராட்டத்தில், 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் இன்சார்ஜ் பார்ப்பதால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரி செய்திட வேண்டும். உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.