< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் தர்ணா
விழுப்புரம்
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் தர்ணா

தினத்தந்தி
|
16 Sep 2023 6:45 PM GMT

விளம்பர பதாகை அகற்றப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோலியனூர் நான்குமுனை சந்திப்பில் பா.ம.க.வினர் வைத்திருந்த விளம்பர பதாகையை வளவனூர் போலீசார் அகற்றினர். இதை கண்டித்து கோலியனூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஞானவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது விளம்பர பதாகையை அகற்றிய வளவனூர் போலீசாரை கண்டித்தும், உடனடியாக விளம்பர பதாகையை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் பா.ம.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விளம்பர பதாகை வைக்க அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்