தருமபுரி: பென்னாகரம் அருகே பட்டாசு குடோன் வெடித்து விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..!
|பட்டாசு குடோன் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பட்டாசு குடோன்கள் உள்ளது. இங்கு சிவகாசி உள்ளிட்ட வெளியூரில் இருந்து வாங்கி வரும் பட்டாசுகளும், இந்த பகுதியில் நடைபெறும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழங்க நாட்டு பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருறது.
அந்த வகையில் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது.
இந்நிலையில், இந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் வேலைக்கு வந்த 2 பெண்கள் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் வெடித்ததில் பட்டாசு குடோன் தரைமட்டமாகியுள்ளது. இதனால், இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என்பது குறித்து மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும், பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பகுதிக்கு மக்கள் செல்லவேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.