தர்மபுரி
தர்மபுரி நகராட்சி 10-வது வார்டு பகுதியில்கழிவுநீர் தேங்குவதை தடுக்க வடிகால் வசதி மேம்படுத்தப்படுமா?
|தர்மபுரி நகராட்சி 10-வது வார்டு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் தெருக்களில் தேங்குவதை தடுக்க வடிகால் வசதி மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
10-வது வார்டு
தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சியின் மைய பகுதியில் 10-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் சிவசுப்பிரமணியசாமி கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சஞ்சீவிராயன் தெரு, கந்தசாமி தெரு, கோனேரிசெட்டி தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த வார்டில் 840 குடியிருப்புகள் உள்ளன. வார்டின் மக்கள் தொகை 3,695 ஆகும். இந்த வார்டில் 712 ஆண் வாக்காளர்கள், 812 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,524 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வார்டில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பிற நாட்களிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த கோவில் முன்பு கிருபானந்த வாரியார் பயன்படுத்திய குளம் உள்ளது. இந்த வார்டில் 70 தெரு விளக்குகளும், 3 குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன. இந்த வார்டில் கழிவுநீர் மழைநீரோடு சேர்ந்து சாலைகள் குடியிருப்புகளில் தேங்கும் பிரச்சினை உள்ளது. இதனால் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்த வார்டில் உள்ள மக்களுக்கு தேவையான கூடுதல் குடிநீரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக இந்த வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் பாதிப்பு
கோவில் அர்ச்சகர் மோகன்:-
குமாரசாமிப்பேட்டை வழியாக செல்லும் பென்னாகரம் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில அடிகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் சாலையில் மட்டத்திற்கு கீழே சென்று விட்டன. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீர் கழிவு நீரோடு சேர்ந்து சிவசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ள தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த பகுதி சாலையில் மழைநீர் கழிவுநீர் ரோடு கலந்து தேங்குவதை தடுக்க உரிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
சிறு பாலங்கள்
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி மதியழகன்:-
10-வது வார்டு பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்கே உள்ள கழிவு நீர் கால்வாய்கள் குறுகலாகவும், சிறியவையாகவும் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் சீராக வெளியேறாமல் இந்த வார்டில் உள்ள சில தெருக்களில் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தண்ணீர் தேங்காமல் இருக்க பிள்ளையார் கோவில் தெரு, அரிச்சந்திரன் கோவில் தெரு ஆகியவை இணையும் பிரதான சாலையில் சிறு பாலங்கள் அமைத்து கழிவுநீர் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இந்த வார்டு வழியாக செல்லும் ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரதான குழாயில் குடிநீர் சீராக செல்வதிலும் பிரச்சினை உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
கூடுதல் குடிநீர் தொட்டிகள்
இல்லத்தரசி சாந்தி:-
இந்த வார்டில் பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இதனால் அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் குறுகலாக உள்ளன. இவற்றை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.