< Back
மாநில செய்திகள்
தர்மபுரி நகராட்சி 9-வது வார்டுஎரிவாயு தகன மேடை அமைக்கும் பணி விரைவுப்படுத்தபடுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி நகராட்சி 9-வது வார்டுஎரிவாயு தகன மேடை அமைக்கும் பணி விரைவுப்படுத்தபடுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
30 Jan 2023 12:15 AM IST

தர்மபுரி நகராட்சி 9-வது வார்டு பகுதியில் ஆமை வேகத்தில் நடந்து வரும் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

9-வது வார்டு

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சியின் மைய பகுதியில் உள்ள 9-வது வார்டில் அரிச்சந்திரன் கோவில் தெரு, வட்டார வளர்ச்சி காலனி, சந்தைப்பேட்டையின் ஒரு பகுதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு தர்மபுரி உழவர் சந்தை, அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை ஆகியவை உள்ளன. இந்த வார்டில் 455 குடியிருப்புகளில் 2,246 பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் இருந்த போதும் இந்த வார்டில் கழிவுநீர் சாலைகளில் தேங்குவது, குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவது போன்ற பிரச்சினைகள் உள்ளன. கழிவுநீர் கால்வாயை சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்க 6 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 50 சதவீதத்தினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வார்டில் உள்ள அரிச்சந்திரன் கோவில் மயானத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணியை விரைவுப்படுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில் எரிவாயு தகன மேடை வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாக்கடை கால்வாய் சீரமைப்பு, சாலை வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக வார்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர் கால்வாய் வசதி

6-வது குறுக்கு தெருவை சேர்ந்த அப்பு :-

இந்த வார்டு பகுதியில் உள்ள பிரதான சாலை உயர்த்தப்பட்டதால் மழை பெய்யும் போது மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வார்டில் உள்ள 6-வது குறுக்கு தெருவில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் சாலை வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிப்படைகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், சாலை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள்

அரிச்சந்திரன் கோவில் தெருவை சேர்ந்த நிர்மலா மாது:-

இந்த வார்டில் உள்ள அரிச்சந்திரன் கோவில் மயான பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் உள்ள மயானத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மயானத்தில் அமர்ந்து மது குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடப்பதை முழுமையாக தடுக்க வேண்டும். இந்த வார்டில் குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.

வேகத்தடை

வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்த மனோகரன்:-

இந்த வார்டில் உள்ள வட்டார வளர்ச்சி காலனி பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடும் பிரச்சினை உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். இந்த வார்டு பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் இங்கு வாகன போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

9-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஏ.மாதேஸ்வரன்:-

9-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்குரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். தர்மபுரி நகராட்சி பகுதிக்குட்பட்ட குமாரசாமிப்பேட்டை, அப்பாவு நகர், மதிகோன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 9-வது வார்டில் உள்ள அரிச்சந்திரன் கோவில் மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை விரைவுப்படுத்த வேண்டும். சந்தைப்பேட்டை ரோடு மற்றும் கிருஷ்ணகிரி ரோடு ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலை பழுதடைந்துள்ளது. அதை புதுப்பிக்க வேண்டும். சந்தை பேட்டை நகராட்சி பள்ளியில் கழிவறைகளை சீரமைத்து மேம்படுத்த வேண்டும். இந்த வார்டு பகுதிக்குட்பட்ட கிருஷ்ணகிரி சாலையில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம். வார்டின் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்