< Back
மாநில செய்திகள்
குழந்தைகள் மையத்தை தொடக்கப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

குழந்தைகள் மையத்தை தொடக்கப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
25 Dec 2022 6:45 PM GMT

தர்மபுரி நகராட்சி 5-வது வார்டு பகுதியில் உள்ள குழந்தைகள் மையத்தை தொடக்கப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

5-வது வார்டு

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சியின் வடக்கு பகுதியில் 5-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் ஜாகிர்தார் ரோடு, கோட்டை மெயின் ரோடு, இஸ்மாயில் ரோடு, மாணிக்கம் செட்டி தெரு, ஆசாத் ரோடு, மன்னார் தெரு உள்ளிட்ட 10 தெருக்கள் உள்ளன. இந்த வார்டில் 734 ஆண் வாக்காளர்களும், 776 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,510 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வார்டில் 120 தெருவிளக்குகள் உள்ளன. பொது மக்களுக்கு குடிநீர் வழங்க 7 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நகராட்சி குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் இந்த மையத்திற்கு செல்கின்றனர். இந்த மையம் செயல்படும் கட்டிடம் மிகவும் பழதடைந்து விட்டது. இதனால் கட்டிடத்தை இடித்து விட்டு மீண்டும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும். இந்த மையத்தை அரசு தொடக்கப்பள்ளியாக மேம்படுத்த வேண்டும் என்று இந்த பகுதி மக்கள். கோரிக்கை விடுகிறார்கள்.

தேங்கும் கழிவுநீர்

தர்மபுரி நகரின் முக்கிய வழிபாட்டு தலங்களான கோட்டை மல்லிகார்ஜூனசாமி கோவில், கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோவில் ஆகியவை இந்த வார்டில் அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கு விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த வார்டில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் 3 பழுதடைந்து விட்டன. அவற்றை சீரமைக்க வேண்டும்.

வார்டில் உள்ள தெருக்களில் அமைந்துள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் சிறியதாக இருப்பதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கும் பிரச்சினை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வார்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

கோட்டையை சேர்ந்த சங்கீதா சுந்தரம்:-

கோட்டை பகுதியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே இந்த கோவில்கள் அருகே இரவு நேரத்தில் போதிய வெளிச்சத்தை ஏற்படுத்த உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். இந்த வார்டு பகுதியில் அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் வழிப்பறி சம்பவங்களை தடுப்பதற்கு முக்கிய சாலை சந்திப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இந்த வார்டில் அமைந்துள்ளநகராட்சி குழந்தைகள் நல மையத்தை தொடக்கப்பள்ளியாக தரம் உயர்த்தி புதிய கட்டிடம் கட்டவேண்டும்.

கொசு மருந்து அடிக்க வேண்டும்

ஜாகிர்தார் சாலையை சேர்ந்த வெள்ளியங்கிரி:-

இந்த வார்டில் அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள 4 ரோடுகள் சந்திக்கும் இடம் இரவு நேரத்தில் இருளில் மூழ்குகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். ஜாகிதார் ரோடு, இஸ்மாயில் ரோடு, மாணிக்கம் தெரு ஆகியவை மிகவும் குறுகலான தெருக்கள். இங்கு கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் கழிவுநீர் சீராக வெளியேறுவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த 2 நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சேகர்:-

5- வது வார்டில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க குடிநீர் தொட்டிகள் போதிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பழுதடைந்துள்ளது. இதனால் இந்த வார்டு பகுதியில் அடிக்கடி குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள குடிநீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும். இந்த வார்டில் பல இடங்களில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். குறிப்பாக தேவை உள்ள இடங்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்