< Back
மாநில செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில்  விதிகளை மீறி செயல்பட்ட 3 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை  திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் நடவடிக்கை
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 3 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
26 Nov 2022 6:45 PM GMT

தர்மபுரி மாவட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 3 கடைகளில் உர விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

திடீர் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 2,205 டன் யூரியா, 1,383 டன் டி.ஏ.பி., 897 டன் பொட்டாஷ், 4,532 டன் காம்ப்ளக்ஸ், 448 டன் எஸ்.எஸ்.பி. உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளில் உரங்கள் விற்பனை விதிமுறைப்படி நடக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேளாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.

இதன்படி வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மேற்பார்வையில் மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் செயல்படும் உர கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வை தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் தலைமையில் அதிகாரிகள் நடத்தினார்கள்.

3 கடைகளில் விற்பனைக்கு தடை

அப்போது விற்பனை முனைய கருவியில் உள்ள உரங்களின் இருப்பும், உர கடையில் உள்ள உண்மையான உர இருப்பும் சரியாக உள்ளதா? அரசு நிர்ணயித்த விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல் விற்பனை செய்யப்படும் உரங்களுக்கு ரொக்க ரசீது வழங்கப்படுகிறதா? தினமும் ஒரே இருப்பு மற்றும் விலைப்பட்டியல் தகவல் பலகையில் கடைகள் முன்பு பார்வைக்கு வைக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது 3 உரக்கடைகளில் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி உர விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த 3 கடைகளில் உர விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்