ராமநாதபுரம்
ஏர்வாடி தர்கா கொடியிறக்கம்
|ஏர்வாடி தர்கா கொடியிறக்கம் நடைபெற்றது.
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 848-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடி இறக்கத்துடன் முடிவடைந்தது. விழாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களில் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர். கடந்த 23-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹுதீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக் காகவும் உலக அமைதிக் காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடியிறக்கம் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர், தலைவர் பக்கீர் சுல்தான், துணைத்தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜூதீன் ஆகியோர் தலைமையில் தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.