< Back
மாநில செய்திகள்
தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்ரூ.2.62 கோடியில் கட்டப்பட்ட 52 வீடுகள் திறப்புவிழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்ரூ.2.62 கோடியில் கட்டப்பட்ட 52 வீடுகள் திறப்புவிழா

தினத்தந்தி
|
17 Sep 2023 6:45 PM GMT

தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.62 கோடியில் கட்டப்பட்ட 52 வீடுகள் திறப்புவிழா நடந்தது.

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.62 கோடியில் புதிததாக கட்டப்பட்ட 52 வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முகாமில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.

52 வீடுகள் திறப்பு

எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 52 வீடுகளை, வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் நடந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது தாப்பாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கி பேசுகையில், தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.60 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 52 வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இந்த முகாமில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், 52 புதிய வீடுகளுக்கு ரூ.4.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளும், ரூ.4.99 லட்சம் மதிப்பீட்டில் 21 தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. முகாமில் ஓரடுக்கு கற்சாலை ரூ.12.23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

முகாமிற்கு புதிய வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் பணிகளுக்காக தற்போது ரூ.2.93 கோடி மதிப்பீட்டுத் தொகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 93 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிருஷ்டி பாய், இலங்கை தமிழர் மறுவாழ்வுத்துறை தனி தாசில்தார் சுமதி, தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பாண்டி, புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், சசிகுமார் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்