திருவள்ளூர்
சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு
|சென்னையில் இருந்து 60 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்,
சைக்கிளில் சென்ற டி.ஜி.பி.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை சென்னையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு தாமரைப்பாக்கம், வெங்கல், சித்தஞ்சேரி, புல்லரம்பாக்கம் வழியாக திருவள்ளூருக்கு 60 கி.மீ. தூரம் சென்றார்.
அப்போது வெங்கல் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பிரச்சினைகளை அவர் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஆண்கள் போலீஸ் பயிற்சி மையத்தையும், கனகவல்லிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் போலீஸ் பயிற்சி மையத்தையும் அவர் நேரடியாக ஆய்வு செய்தார். அங்கிருந்த காவலர்களுக்கு அவர் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் காவலர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவலர் பயிற்சி மையத்தை ஆய்வு செய்தேன். பயிற்சியில் அனைத்து காவலர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் பயிற்சி பெறும் காவலர்களில் 30 சதவீதம் பேர் பொறியியல் மற்றும் முதுகலை பட்டதாரிகள். தமிழகத்தில் 10 ஆயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த 10 ஆயிரம் பேரும் பணிக்கு வரும்போது காவல்துறை இளமையாக காட்சி அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.