< Back
மாநில செய்திகள்
பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
நாமக்கல்
மாநில செய்திகள்

பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

தினத்தந்தி
|
15 Feb 2023 1:00 AM IST

நாமக்கல் அருகே பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

குடற்புழு நீக்க மாத்திரை

நாமக்கல் ஒன்றியம் காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 18 ஆயிரத்து 438 பேருக்கும், 20- 30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்கள் 1 லட்சத்து 53 ஆயிரத்து 830 பேருக்கும் என மொத்தம் 6 லட்சத்து 72 ஆயிரத்து 268 பேருக்கு குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

ரத்தசோகை குறைபாடு

இந்த மாத்திரைகள் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் குடற்புழு நீக்க மாத்திரை உதவுகிறது.

குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு இம்மருந்தின் மூலம் தடுக்கப்படுகிறது. அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். மேலும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக ரத்தசோகை குறைபாடு போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. இத்தேசிய குடற்புழு நீக்க திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 2 தவணைகளாக குடற்புழு நீக்க முகாம் நடத்தப்பட்டு வருகிறது. குடற்புழு நீக்க மருந்து வழங்கும் பணியில் 3,531 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக கலெக்டர் தலைமையில் தேசிய குடற்புழு நீக்க உறுதிமொழியினை அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், டாக்டர் சண்முகபிரியா, அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்