கோயம்புத்தூர்
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
|கிணத்துக்கடவில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.
குடற்புழு நீக்க வாரம்
தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக மாணவ-மாணவிகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகமும், கைகளை கழுவும் விதம் குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
28 ஆயிரம் பேருக்கு...
இதில் கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா, நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சி.சமீதா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மொத்தம் 29 ஆயிரத்து 500 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக நடைபெற்ற முகாமில் 28 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. விடுபட்டவர்களுக்கு வருகிற 24-ந் தேதி அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.