< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தினத்தந்தி
|
5 Jun 2022 3:33 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 7 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். சுமார் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலுக்கு வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.

ஆனால் நேற்று நள்ளிரவு முதல் பக்தர்கள் கூட்டம் குவிந்து காணப்பட்டதால் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், பின்னர் உச்சிகால தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

7 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

மேலும் நேற்று வளர்பிறை சஷ்டி என்பதால் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீராடினர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிந்ததையடுத்து, கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டது.

பக்தர்கள் வந்த வாகனங்களால் கோவில் வடக்கு மற்றும் தெற்கு டோல்கேட் நிரம்பியது. இதையடுத்து, திருச்செந்தூர் நகரில் உள்ள டி.பி.ரோடு, ரத வீதிகள் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் செய்திகள்