< Back
மாநில செய்திகள்
படைப்பத்து மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

படைப்பத்து மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

தினத்தந்தி
|
22 July 2023 12:28 AM IST

படைப்பத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

அரியலூரில் மேலத்தெருவில் உள்ள படைப்பத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா நடந்தது. இதையொட்டி கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, நிகழ்ச்சி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புறப்பட்டு சென்று பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலை அடைந்தனர். அங்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் மஞ்சள் ஆடை அணிந்து, பலர் 15 அடி நீளம் கொண்ட அலகுகளை குத்திக்கொண்டும், கையில் தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் மார்க்கெட் தெரு, வெள்ளாளர் தெரு, தட்டார தெரு, ஆஸ்பத்திரி ரோடு, புருஷோத்தம வாத்தியார் தெரு வழியாக வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். படைப்பத்து மாரியம்மனுக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடந்தன. அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவில் படைப்பத்து மாரியம்மன் எழுந்தருள வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், படைப்பத்து மக்கள் நலக்குழு மற்றும் மேலத்தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்