< Back
மாநில செய்திகள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு குமரியில் குவிந்த பக்தர்கள் - முன்னோர்களை நினைத்து தர்ப்பனம் செய்து வருகின்றனர்
மாநில செய்திகள்

மகாளய அமாவாசையை முன்னிட்டு குமரியில் குவிந்த பக்தர்கள் - முன்னோர்களை நினைத்து தர்ப்பனம் செய்து வருகின்றனர்

தினத்தந்தி
|
25 Sept 2022 8:27 AM IST

மகாளய அமாவாசையை முன்னிட்டு குமரியில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கன்னியாகுமரி,

மகாளய அமாவாசை அன்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் புரட்டாசிமாத மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்வர்.

குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இதையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலை 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

அதன் பிறகு ஈரத் துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்தபுரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

பின்னர் கடற்கரையில்உள்ள பரசுராமர் விநாயகர் கோவில்,பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில்நிலையசந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ளசர்க்கரதீர்த்த காசிவிசாலாட்சிசமேத காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு குமரியில் குவிந்த பக்தர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்