வார விடுமுறையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
|திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில், வார விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் ரூ.100 தரிசன கட்டண பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் திருச்செந்தூர் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கோவிலில் இருந்து வாகனங்கள் பஸ் நிலையம் கடந்து வெளியே வரமுடியாமல் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஏராளமான பக்தர்கள் கூடியதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.