< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
25 Oct 2023 8:35 PM IST

தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

திருத்தணி முருகன் கோவில் முருகபெருமானின் 5-ம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு அரசு விடுமுறை மற்றும் நேற்று விஜயதசமி என்பதால் ஆந்திரா, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

மேலும் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதன் காரணமாக முருகன் கோவிலில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் பள்ளியில் சேர்த்தனர்.

இதனால் பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். விஜயதசமியை முன்னிட்டு உற்சவர் முருகப்பெருமான் நேற்று மாலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பூ மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.

மேலும் செய்திகள்