< Back
மாநில செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தினத்தந்தி
|
12 Jun 2022 5:25 PM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளை (திங்கட்கிழமை) இரவு பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளை (திங்கட்கிழமை) இரவு பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது.

அருணாசலேஸ்வரர் கோவில்

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

மேலும் திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

அதுமட்டுன்றி ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சில பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

இன்று பவுர்ணமி தொடங்குகிறது

தொடர்ந்து இன்று மாலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்ட நந்தி பகவானுக்கும், சாமிக்கும் பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.20 மணியளவில் தொடங்குகிறது.

தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5.55 மணியளவில் கிரிவலம் நிறைவடைகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்