< Back
மாநில செய்திகள்
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
கரூர்
மாநில செய்திகள்

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

தினத்தந்தி
|
15 Oct 2023 12:14 AM IST

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தென் திருப்பதி

கரூர் தாந்தோணிமலையில் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

அந்தவகையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று அதிகாலையில் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திரளான பக்தர்கள்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் கரூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திராளன பக்தர்கள் அதிகாலை முதலே குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர். நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

கோவிலில் பொதுதரிசனத்துக்கும், கட்டண தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் தெப்பக்குளம் அருகே உப்பு, மிளகு வைத்து சூடம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். மேலும் கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

போலீசார் பாதுகாப்பு

பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பையொட்டி ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாதபடி பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தன.

ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூரில் இருந்து தாந்தோணிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

குளித்தலை

குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே சுவாமியின் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நொய்யல்-வேலாயுதம்பாளையம்

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி,பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமிக்கு மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் செய்திகள்