< Back
மாநில செய்திகள்
ஆருத்ரா தரிசனத்தை காண தமிழகத்தின் முக்கிய கோயில்களில் குவிந்த பக்தர்கள்
மாநில செய்திகள்

ஆருத்ரா தரிசனத்தை காண தமிழகத்தின் முக்கிய கோயில்களில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
6 Jan 2023 10:41 AM IST

தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்தனர்.

நெல்லை,

மார்கழி திருவாதிரை நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தால் சகலவித சுகபோகங்களும் கிடைக்கப்பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணு தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதைக் கண்டார் ஆதிஷேசன். அதுபற்றி மஹாவிஷ்ணுவிடம் கேட்க, தாருகாவனத்தில் சிவபெருமான் ஆடிய அற்புத நடனம் பற்றி சொல்ல, ஆதிஷேசனுக்கு தானும் அந்த நடனத்தை பார்க்க ஆவல் ஏற்பட்டது.

அதற்காக பாதி உடல் மனிதனாகவும் மீதி உடல் பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் இருந்தார். அவருக்காக சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

* பஞ்ச சபைகளில் ஒன்றான நெல்லை தாமிர சபையில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

* நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மன் திருக்கோயிலில் நடந்த ஆருத்ரா நடனத்தை காண பக்தர்கள் குவிந்தனர்.

* சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

* திருத்தணி அருகே திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

* தென்காசி குற்றாலநாதர் கோயிலில் நடந்த தாண்டவ தீபாராதனை நடனத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

* போடியில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.

* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ருத்ராட்ச மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு 16 வகை அபிஷேக ஆராதனை நடந்தது.

* திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

* தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது.

* கும்பகோணத்தில் நாகேஸ்வரர் ஆலயத்தில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு மங்கள பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

* செய்யாறில் ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்