பெரம்பலூர்
அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
|அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ேமலும் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் நடை நேற்று காலை 6 மணியளவில் திறக்கப்பட்டது. காலை முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பால்குட ஊர்வலம்
மேலும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை வாடா விளக்கில் ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பெரம்பலூர் அருகே துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இரவில் அம்மனுக்கு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குன்னம்
குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் பால் குடங்களை எடுத்து ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கோவில் மண்டபத்தை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து செல்லியம்மனுக்கு 108 குட பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.