< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
22 July 2022 9:59 PM IST

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மன் பக்தர்களுக்கு வேண்டிய வரங்கள் அருள்வாள் என்பது நம்பிக்கை. இதையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவிய பொருட்களால் ஆன சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை உள்ளிட்ட உச்சிகால பூஜை நடந்தது. அதன்பிறகு இரவு 7 மணி அளவில் அம்மனின் தங்கத்தேர் உலா நடைபெற்றது. இதில் கோட்டை மாரியம்மன் தங்கத்தேரில் வீற்றிருக்க கோவிலின் உள்பிரகாரத்தில் அம்மன் உலா வருதல் நடந்தது. மேலும் அம்மனிடம் வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெற்றவர்கள் கூழை அம்மனுக்கு படைத்து அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், அபிராமி அம்மன் மற்றும் ஞானாம்பிகைக்கு காலை 9 மணி அளவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணியளவில் அபிராமி அம்மன் மற்றும் ஞானாம்பிகை சன்னதி முன்பு ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களால் ஆன பந்தல் அலங்காரம் அமைக்கப்பட்டு அம்மனுக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம், பூஜை தீபாராதனை நடைபெற்றது.

பழனி

திண்டுக்கல் நாகல்நகர் மாதா புவனேஸ்வரி அம்மன் கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி அங்காள பரமேஸ்வரி கோவில், பழனி ரோடு அக்ரஹாரத்தில் உள்ள காளியம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், ரண காளியம்மன் கோவில்களில் பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்ய குவிந்தனர். மேலும் பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கினர்.

கொடைக்கானல்

கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சின்ன மாரியம்மன் கோவில், பாம்பார்புரம் பத்ரகாளி அம்மன் கோவில், டெப்போ காளியம்மன் கோவில் கல்லுக்குழி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்கு ெபண்கள் பொங்கல் வைத்தும், கூழ் காய்ச்சியும் பக்தர்களுக்கு வழங்கினர்.

பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பெண்கள் புடவை, தாம்பூலம் வைத்து பூஜை செய்தனர். அதனைத்தொடர்ந்து சுயம்பு நாகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் பத்ரகாளியம்மன் கோவில், காளியம்மன்-பகவதியம்மன் கோவில், அய்யம்பாளையம் சின்ன முத்தாலம்மன், பெரிய முத்தாலம்மன் கோவில், சித்தரேவு முத்தாலம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நத்தம்

நத்தம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நத்தம் பகவதி, காளியம்மன், ராக்காயி, தில்லை காளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

மேலும் செய்திகள்