< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
16 Oct 2023 4:30 AM IST

நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். வீடுகளில் கொலு வைத்து வழிபட்டனர்.

நவராத்திரி விழா

ஆண்டுதோறும் அம்மன் கோவில்களில் நடத்தப்படும் விழாக்களில் நவராத்திரி விழா முக்கியமானது. 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பலவித அலங்காரம் செய்யப்பட்டு விஜயதசமியன்று நவராத்திரி விழா நிறைவு பெறுவது வழக்கம்.

அதன்படி, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கோவிலில் கொலு பொம்மைகள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி விழாவில் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தான அபிராமி அம்மன் மற்றும் உற்சவர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. அதன்பிறகு நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று கோவில் கொலு மண்டபத்தில் அம்மனுக்கு அபிராமி அம்மன் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) ராஜாங்க அலங்காரம், 3-ம் நாள் புன்னைமர கிருஷ்ணன், சிவபூஜை, கஜலட்சுமி என அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். அதைத்தொடர்ந்து 10-ம் நாளில் அம்மன் அம்பு போடுதல் நிகழ்ச்சியும், மறுநாள் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

கொலு வைத்து வழிபாடு

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பிறகு கோவில் கொலு மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. மேலும் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கொலுவை பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். விழாவில் ஒவ்வொரு நாளும் ஈஸ்வரி, மீனாட்சி அம்மன் என பல்வேறு அலங்காரங்கள் நடைபெறுகிறது. விஜயதசமியன்று கோவில் வளாகத்தில் அம்மன் அம்பு போடுதலும், அடுத்த நாள் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

திண்டுக்கல் பாரதிபுரம் மாதா புவனேசுவரி அம்மன் கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில் உள்பட திண்டுக்கலில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

இதேபோல் பல்வேறு அம்மன் கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. இதனால் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் வீடுகளில் கொலு வைத்து பெண்கள் நவராத்திரி விழா நடத்துகின்றனர். இந்த கொலுவில் புராணம், இதிகாச காட்சிகளை நினைவு கூறும் வகையில் மற்றும் பல்வேறு அலங்கார பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்