திருவள்ளூர்
ஆடி அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
|ஆடி அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
வீரராகவ பெருமாள் கோவில்
திருவள்ளூரில் மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் காஞ்சீபுரம், சென்னை, ஆந்திர போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் குவிந்தனர். மேலும், நேற்று காலை கோவில் குளக்கரை சுற்றுப்புற பகுதியில் உள்ள புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் மூலவர் வீரராகவரை வழிப்பட சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்மாள் சமேத திரிப்புராந்தக சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தொண்டை நாட்டின் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் 32-ல் 14-வது கோவிலாகும்.
இந்த கோவிலின் உள்ள சுவாமி திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. இதன் காரணமாக இறைவனுக்கு தீண்டாத் திருமேனி என்ற பெயரும் உள்ளது.
தேரோட்டம்
இந்த கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் திரிபுரசுந்தரி அம்மாள் திருப்பரந்தக சுவாமியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.